பதிவு செய்த நாள்
01
ஜன
2022
10:01
ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆஞ்சநேயருக்கு இருபுறமும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர். இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள 33அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி, மங்களம் உண்டாகும். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1ம் தேதியான நேற்று விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி சந்தனகாப்புடன், வெண்பட்டு உடுத்தி, பல்வேறு பழங்களால் ஆன அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆஞ்சநேய ஸ்வாமிக்கு ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகளின் முன்னிலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கியதுடன், பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தையும் பிரசாதமாக வழங்கினார்.
இக்கோவிலின் ஸ்தாபகரும், தர்ம அதிகாரியுமான ரமணி அண்ணா நங்கநல்லூர், பஞ்சவடி, மூன்றாவதாக ஞானபுரீ ஸ்ரீ சித்திரகூட சேத்திரம் சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலை ஸ்தாபித்தார். அவர் அனுமன் ஜெயந்தி விழாவை ஆரம்பித்து ஐம்பதாவது பொன்விழா ஆண்டாக இவ்வாண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
ஞானபுரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2ம் நாளான இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேய சுவாமிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மகா சுவாமிகள் முன்னிலையில் காலை 8 மணி முதல் கோவில் மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி சுவாமியை ஆராதனை செய்யும் நிகழ்வும், தொடர்ந்து மாலை வெள்ளி திருத்தேர் உலாவும் நடைபெறுகிறது. இன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. இந்த அனுமன் ஜெயந்தி விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆஞ்சநேய பகவானின் திருவருளையும், மகா சுவாமிகளின் குருவருளையும் பெற வேண்டுமாய் கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்ம அதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தில் ஸ்ரீகாரியம் சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அறங்காவலர் ஜெகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.