இதற்கும் அன்னை சீதாப்பிராட்டியார்தான் காரணம். இலங்கைக்குத் தீ வைத்த போது நெருப்பு அவரைச் சுடவில்லை என்றாலும், அதன் வெம்மை அவரைத் தாக்கியது. மேலும் போர்க்களத்தில் ஒரு கட்டத்தில் ராமனை ஒரு தோளிலும், இலக்குவனை மறு தோளிலும் சுமந்து அவர்கள் போரிட உறுதுணையாக இருந்தார் அனுமன். அப்போது எதிரிகள் எய்த அம்புகளாலும், கொடிய ஆயுதங்களாலும் மாருதியின் உடலெங்கும் காயம் ஏற்பட்டது. அதை அவர் ஒரு பேறாகவே கருதினார்.
போர் முடிந்தது. சீதை அக்னிப் பரீட்சையில் வென்று சீதாராமனாக காட்சி அளித்தார் ராமபிரான். அப்போது சீதை அனுமனின் உடலெங்கும் உள்ள காயத்தையும், வெப்பத்தினால் அவர் படும் வேதனையையும் புரிந்து கொண்டாள். என்ன இருந்தாலும் தாய் உள்ளம் அல்லவா? உடனே நிறைய வெண்ணெய் கொண்டு வரச் செய்து, அதை மாருதியின் உடலெங்கும் பூசச் செய்தாள். புண்களினால் ஏற்பட்ட வலியும், சூட்டினால் ஏற்பட்ட வேதனையும் வெகுவாகக் குறைந்தது. அதனால் அனுமன் மனம் மகிழ்ந்து, எனக்கு வெண்ணெய் சாற்றுபவர்களின் நோய் ராமபிரான் அருளால் முழுவதும் நீங்கிவிடும்! என்று கூறினார். அதனாலேயே அவருக்கு வெண்ணெய் சாற்றும் வழக்கம் ஏற்பட்டது.
வடை மாலை: நவகிரகங்களில் உளுந்து ராகுவுக்குரிய தானியம். ராகுவாலும் சில கெடுதல்களைச் செய்ய முடியும். அதைப்போக்க உளுந்தை நன்றாக அரைத்து, வடை செய்து அதை மாலையாக்கி அனுமனுக்கு அணிவித்து வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும். தோலுடன் கூடிய கறுப்பு உளுந்து என்றால் மிகவும் விசேஷம் என்பது ஐதிகம்.