மயிலாடுதுறை: அய்யாவாடி மஹா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நடந்த, நிகும்பலா யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடி கிராமத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற மஹா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும், நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாத அமாவாசையான நேற்று, இக்கோவிலில் நிகும்பலா யாகம் நடந்தது. அம்பாளை கோவில் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 1:00 மணிக்கு, தண்டபாணி குருக்கள் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசனம் செய்தனர்.