ஜம்மு-ஜம்மு - காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 12 பேர் பலியானதை அடுத்து, அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ரேசாய் மாவட்டம் கத்ரா நகரில் திரிகுடா மலை மீது 5,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது வைஷ்ணோ தேவி கோவில். மிகவும் பிரபலமான இந்தக் கோவிலில் புத்தாண்டு நாளில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 12 பக்தர்கள் உயிர்இழந்தனர். இதையடுத்து மலை அடிவாரத்தில் இருந்து கோவில் வரையிலும், கோவில் வளாகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணிகளில் அதிக அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.புத்தாண்டு நாளில் நடந்த விபத்து குறித்து விசாரிக்க, உள்துறை முதன்மை செயலர் சலீன் கப்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விரிவான விசாரணை நடத்தி, ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். விபத்து குறித்து பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.