சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி, மேட்டுப்பட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மார்கழி அமாவாசையை முன்னிட்டு நேற்று அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக 31.12.21 அன்று காலை 8 மணி முதல் பஞ்ச சூக்த ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், அனுமன் சஹஸ்ர நாம ஹோமம் நடைபெற்றது. தொடர்ச்சியாக காலை 10.30 மணிக்கு 1000 லிட்டர் பால் அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம், மற்றும் 16 வகையான திரவியங்களுடன் அபிஷேகமும், பின் ஏழு வகையான வர்ணாபிஷேகமும், நவ கலச கும்ப அபிஷேகமும் நடந்தது. அன்றைய தினம் அனுமான் பட்டு சாத்தி தங்க கவசத்தில் அருள்பாலித்தார். இரவு 8 மணிக்கு, பிரமாண்டமான புஷ்பாஞ்சலி நடைபெற்றது. 1.1.22 சனிக்கிழமையன்று அனுமான் திருப்பதி ஏழுமலையான் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். நேற்று 2.2.22 ஞாயிற்றுகிழமை அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயர் ராஜாதி ராஜனாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.