பதிவு செய்த நாள்
04
ஜன
2022
03:01
அவிநாசி: பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த, மாநில அளவிலான திருப்பணி வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளது; இதையடுத்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலம், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் கொண்டது.
சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த, 1980ல், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பின், 1991, மற்றும், 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஹிந்து ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், அவிநாசி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, விரைவில் கும்பாபிஷேகம். நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது. திருப்பணிகள் துவங்காததால், கோவிலில் பல இடங்களில், கட்டுமான பணிகள் சேதமடைந்து வருகின்றன என்ற புகாரும் இருந்தது. தொடர்ச்சியாக, கடந்தாண்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து ஆய்வு செய்து, திருப்பணி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்தனர். நிறை, குறை மற்றும் தேவைகளை கேட்டறிந்தனர். இக்கோவில், 100க்கும் மேல் பழமை வாய்ந்ததாக இருப்பதால், கும்பாபிஷேகம் நடத்த, ஐகோர்ட் நியமித்த மாநில அளவிலான திருப்பணி வல்லுநர் குழுவின் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அக்குழு, கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி கூறுகையில், “கோவில் குட முழுக்கு செய்ய திருப்பணி வல்லுநர் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. திருப்பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திட்ட அறிக்கை தயாரானவுடன், உபயதாரர்கள் மட்டடத்திலான ஆலோசனை நடத்தப்பட்டு, முடிவெடுக்கப்படும். " என்றார்.