பதிவு செய்த நாள்
04
ஜன
2022
04:01
ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரியில், சுவாமி நம்மாழ்வார் திருஅத்யயன உற்சவம் நேற்று துவங்கியது. ஆழ்வார்களில் முதன்மையானவரான, சுவாமி நம்மாழ்வார் அவதாரத் திருத்தலம் ஆழ்வார்திருநகரியில் மார்கழி திருஅத்யயன உற்சவம் பகல்பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.
முதல் 10 நாட்களில் திவ்ய பிரபந்த பாசுரங்களில் குறிப்பிட்ட பாசுரங்களுக்கு, அரையர் வியாக்கியானம் அபிநயத்துடன் பாடவும், பின்பத்து நாட்களில் திருவாய்மொழி பாசுரங்களை இசையோடு, ஸ்ரீபூமி, நீளா தேவி சமேத சுவாமி பொலிந்து நின்ற பிரான் முன் விண்ணப்பிக்கவும் வரைமுறை செய்துள்ளார். திரு அத்யயன உற்சவம், நேற்று ஆழ்வார் திருநகரியில் துவங்கியது. உடையவர் சன்னதியில் இருந்து உடையவர், கூரத்தாழ்வான், பிள்ளை லோகாச்சாரியார், வேதாந்ததேசிகர் ஆகியோருடன், யானை முன்னே செல்ல புறப்பட்டு ஊர்வலமாக சுவாமி நம்மாழ்வார் சன்னதிக்கு எழுந்தருளினர். சன்னதியில், அரையர் திருப்பல்லாண்டு கேட்டருள எழுந்தருள வேண்டும் என விண்ணப்பித்தார். பகல் பத்து மண்டபத்துக்கு பெருமாள் தாயார், சுவாமி நம்மாழ்வார், சேனை முதல்வர், 12 ஆழ்வார்களுடன் எழுந்தருளி அரையர் அபிநய வியாக்யானத்துடன் திருப்பல்லாண்டு துவங்கியது. நேற்று துவங்கி 21 நாட்கள் திருஅத்யயன உற்சவம் நடக்கிறது. வரும் 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அஜீத் மற்றும் உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.