கோவை: கோவை சலிவன் வீதியிலுள்ள வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில், திருஅத்யாயன உற்சவ திருவிழா கோலாகலமாக துவங்கியது.இக்கோவிலில் அத்யாயன உற்சவம், 21 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. முதல் பத்து நாட்கள் பகல்பத்து உற்சவம் என்றும், திருமொழித்திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உற்சவம் நேற்று முன் தினம் துவங்கியது. இந்நாளில், திருப்பல்லாண்டு பாராயணம் செய்யப்படும். தொடர்ந்து முதல் பத்து நாள் உற்சவத்தில் பன்னிறு ஆழ்வார்களில் நம்மாழ்வார் தவிர மற்ற, 11 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பெரிய திருமொழி, நாச்சியார் திருமொழி உள்ளிட்ட அனைத்து பாடல்களும் பாராயணம் செய்யப்படும். பாசுரங்கள் சேவிக்கப்படும்.11வது நாள், ராப்பத்து உற்சவம் துவங்கும். அன்றைய தினம் நம்மாழ்வார் இயற்றிய நாலாயிரத்திவ்யபிரபந்தம் பாராயணம் செய்யப்படும்.