பதிவு செய்த நாள்
04
ஜன
2022
11:01
புதுச்சேரி-ஆத்மாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள, எம்பெருமான் என்ற ஞான விளக்கு தேவைப்படுகிறது என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றினார்.
புதுச்சேரி காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி நடைபெறும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் நேற்று உபன்யாசம் செய்ததாவது:ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூவருமே கிருஷ்ணாவதார காலத்தில் கிருஷ்ணன் அவதரித்த போது, ருக்மணி, சத்யபாமா, நப்பின்னை என அவதரித்து கண்ணனை கரம் பிடித்தவர்கள்.இந்த மூவரில் நப்பின்னையை மட்டும் ஆண்டாள் குறிப்பிட்டு மூன்று பாசுரங்கள் அருளியுள்ளதை கவனிக்க வேண்டும்.ஆண்டாள், நப்பின் னையை மட்டும் குறிப்பிட்டு சொல்லக் காரணம். ருக்மணியும், சத்யபாமாவும் கிருஷ்ணனை மணந்த பிறகுதான் நந்தகோபனுக்கு மருமகள்கள் ஆகின்றனர்.ஆனால் நப்பின்னையோ ஆயர் குலத்தில் யசோதையின் சகோதரனுக்கு மகளாக பிறந்தவள் என்பதால், பிறந்த உறவால் முன்னும், மணந்த உறவால் பின்னும் நந்தகோபனுக்கு மருமகள் என்ற பெருமையை பெற்றவள்.எனவே, மற்ற இரு தேவியர்களை விட ஆண்டாள் நப்பின்னையை மட்டும் குறிப்பாக சிறப்பித்து அழைக்கிறார் எனலாம்.எண்ணெய் விட்டால் பிரகாசிக்கும் ஜடப் பொருளாகிய விளக்கு அசித் என்றும், பரமாத்மாவை உணர்ந்தால் பிரகாசிக்கும் ஜீவத்மாவாகிய விளக்கு சித் என்றும், எப்போதுமே பிரகாசமாக உள்ள நந்தா விளக்கு பகவானாகிய பரமாத்மா எனும் ஸ்ரீமத் நாராயணன் என, இப்பாசுரத்தில் ஆண்டாள் குத்துவிளக்கெரிய என்ற சொல்லால் உணர்த்தி உள்ளார்.குத்து விளக்கு என்ற மங்கள தீபம் ஒரு தத்துவத்தை கொண்டுள்ளது. ஒரு விளக்கு தான். ஆனால் ஐந்து முகங்கள் உண்டு.குத்து விளக்கின் ஐந்து முகங்களும் எம்பெருமானின், பரத்துவ, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்ச என்ற ஐந்து நிலைகளை கொண்டுள்ளது. குத்து விளக்கின் ஐந்து முகங்களும் ஏற்றப்பட்டு, எரியும் போது பூர்ணமான விளக்காகிறது.மேல் நோக்கி எரியும் ஜோதியானது, நடுவில் இருக்கும் ஒரு கோபுரம் போன்ற அந்த இடத்தை பிரதானமாக வைத்துக்கொண்டு இருக்கின்றது.
இதுதான் நம் ஆத்மா. விளக்கின் ஐந்து முகங்கள் பஞ்ச இந்திரியங்கள். இந்த ஆத்மா உலக விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு ஐந்து முகங்களான பஞ்ச இந்திரியங்களால் முயற்சிக்கிறது. நிலை பெறுகிறது.அதனால் ஆத்மாவிற்கு ஞானம் உண்டாகிறது. வெளியுலக ஞானத்தை கொண்டு தான் ஆத்மாவின் யாத்திரை நடக்கிறது. தவிர, இந்த ஆத்மாவை சுற்றி இருக்கும் இடத்துக்கும் இந்த ஐந்து ஜோதிகளால் ஓரளவு வெளிச்சம் கிடைக்கிறது. ஆனால் ஆத்மாவை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள, ஆத்ம ஞானம் உண்டாக, வேறு ஒரு ஞான விளக்கை நாம் நாட வேண்டும். அந்த ஞான விளக்கு தான், பரமாத்மாவான எம்பெருமான்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.