பதிவு செய்த நாள்
05
ஜன
2022
12:01
சென்னை: கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகளையும், கோவில் பணியாளர்களுக்கு சீருடைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ஹிந்து சமய அறநிலையத் துறை கோவில்களில், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகள் ஆகியோருக்கு புத்தாடை; பணியாளர்களுக்கு ஒருவருக்கு இரண்டு சீருடை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவில்களுக்கு வரும் பக்தர்கள், எளிதில் அடையாளம் காணும் வகையில், அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரி ஆகியோருக்கு, மயில்கண் கரை பருத்தி வேட்டி, பெண் பூசாரி மற்றும் பெண் பணியாளர்களுக்கு, அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவை; ஆண் பணியாளர்களுக்கு, பழுப்பு நிற கால் சட்டை மற்றும் சந்தன நிற மேல் சட்டை துணி வழங்கப்படுகிறது. இதனால், 36 ஆயிரத்து 684 கோவில்களில் பணிபுரியும், 52 ஆயிரத்து 803 பணியாளர்கள் பயன் பெறுவர். பொங்கல் திருநாளில் இருந்து, பணிக்கு வரும் போது பணியாளர்கள் அணிந்து வரும் வகையில், புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணியை, முதல்வர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் இறையன்பு, அறநிலையத் துறை செயலர் சந்தரமோகன், கமிஷனர் குமரகுருபரன் பங்கேற்றனர்.