பதிவு செய்த நாள்
05
ஜன
2022
01:01
ஸ்ரீபெரும்புதுார், : தர்மேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும்என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.குன்றத்துார் தாலுகா, மணிமங்கலம் ஊராட்சியில் 1,000 ஆண்டுகளுக்கு மேல், பழமையான தர்மேஸ்வரர் கோவில் உள்ளது.தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், சிவன் சன்னிதி, அம்பாள் சன்னிதி, தனித்தனி கோவில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
ஆகம விதிப்படி இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, தொல்லியல் துறை சார்பில் 20 லட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புனரமைப்பு பணிகள் 2018 ஆகஸ்டில் துவங்கியது. ஆறு மாதங்களில் பணி முடிக்கப்பட்டும், தற்போது வரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:கும்பாபிஷேக பணிக்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்து, கோவிலின் வெளியே சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டது.கோவில் கும்பாபிஷேகம்செய்யப்படாததால், கோவிலில் நடந்து வந்த முக்கிய விழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.பாலாலயம் செய்யப்பட்ட சிறிய இடத்தில் உள்ள தர்மேஸ்வரரை வழிபடுகிறோம். விரைவில் கும்பாபிஷேகம் நடத்த தொல்லியல் துறை மற்றும் ஹிந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.