செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சி.சி.டி.வி., கேமிராக்களை உடைத்து விட்டு இரண்டு மர்ம நபர்கள் திருடுவதற்கு முயற்சி செய்தனர். இவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் குடைவரை கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அர்ச்சகர் பூஜைகளை முடிந்து நடைசாற்றினார். இரவு 9 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் கோவிலின் மீது பாதுகாப்பு அமைத்திருந்த இரும்பு வேலியை உடைத்து விட்டு, கருவரை முன்புள்ள தாழ்வாரத்தில் இறங்கி உள்ளனர்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை உடைத்து விட்டு திருட்டு முயற்சியில் இறங்கி உள்ளனர். தாயார் சன்னதி, மூலவர் சன்னதியின் இருப்பு கேட்டை உடைத்துள்ளனர். மூலவர் சன்னதியின் மரக்கதவை உடைக்க முடியாமல் அருகில் இருந்த வரதராஜர் சன்னதியின் இரும்பு பூட்டை உடத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து இரவு காவலர்கள் ரமேஷ், தேவா ஆகியோர் கிராம மக்களை உதவிக்கு அழைத்து கூச்சல் போட்டபடி மலை மீது ஏறி சென்றனர். காவலர்கள் வருவதை கண்ட திருடர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து கோவில் ஊழியர் இளங்கீர்த்தி செஞ்சி போலீசில் புகார் செய்தார். விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா திருட்டு முயற்சி நடந்த ரங்கநாதர் கோவிலை பார்வையிட்டார். செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். திருட்டு நடந்த இடத்தில் பதிவான கைரோகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.