பதிவு செய்த நாள்
07
ஜன
2022
08:01
பெ.நா.பாளையம்: தைப்பூச திருவிழாவையொட்டி, துடியலூர் அருகே வெள்ளக்கிணறுவில் காவடி செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
தைப்பூச திருவிழாவையொட்டி முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகள், காவடி கொண்டாட்டம் நடக்கும். கோவை நகரை சுற்றியுள்ள மருதமலை, குருந்தமலை, குமரன்குன்று, அனுவாவி சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களுக்கு, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, காவடி எடுத்துச் செல்வது வழக்கம். பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, செலுத்து காவடி, ஆறுமுகக் காவடி உள்ளிட்ட பலவகையான காவடிகளை செய்யும் பணி துடியலூர் அருகே வெள்ளக்கிணறுவில் நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுவதையொட்டி, நூற்றுக்கணக்கான காவடிகள் செய்யும் பணி இங்கு நடந்து வருகிறது. மூங்கில், மூங்கில் தப்பை, மாம்பலகை, வேங்கை ஆகியவற்றைக் கொண்டு காவடிகள் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து காவடி செய்து வரும் பணியில் ஈடுபட்டு வரும் சாமியப்பன் மற்றும் அவரது மகள் பூங்கொடி ஆகியோர் கூறுகையில்," எங்களது குடும்பத்தினர், 40 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். செலுத்து காவடி எனப்படும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற விரும்பும் பக்தர்கள், காவடியை விரதமிருந்து எடுத்துச்செல்வது வழக்கம். செலுத்து காவடி செய்ய மாம்பலகை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் செய்தால், காவடி உறுதியாக இருக்கும், உடையாது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை தைப்பூச சீசனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவடிகள் செய்வோம். ஆனால் இப்போது, 300 காவடி களுக்கான ஆர்டர்கள் மட்டுமே கிடைக்கிறது. காவடியை கோவை மட்டுமல்லாமல் நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர் கொடுத்து பெற்று செல்கின்றனர். காவடி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அவை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. குறிப்பாக, மூங்கில் மற்றும் மூங்கில் தப்பை கிடைப்பது அரிதாகவே உள்ளது.
கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காவடி செய்யும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், குறைவான எண்ணிக்கையில் காவடிகள் செய்து, விற்பனை செய்து வருகிறோம். இந்த ஆண்டு கோவிட், ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், காவடிகள் விற்பனை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு தைப்பூச திருநாளன்று, முருகன் கோவில்களில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் வழிபட அரசு அனுமதிக்க வேண்டும். தொற்று காரணமாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் நாங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். இப்பிரச்சனைக்கு தீர்வு காண, அரசு எங்களுக்கு மானியம் வழங்க முன்வரவேண்டும்" என்றனர்.