பதிவு செய்த நாள்
12
ஜன
2022
10:01
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடைபெற உள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வுகளுக்கு, குறைவான பக்தர்களுடன் நடத்தவும், அதற்கு பிறகு தரிசன அனுமதி வழங்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு, நாளை காலை அதிகாலை, 3:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம்; அலங்கார பூஜைகள் நடக்கிறது. அதிகாலை, 5:30 மணிக்கு, கருட வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் எம்பெருமாள், சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளதால், உடனடியாக, கோவில் மண்டபத்துக்குள் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.கோவில் நிர்வாகம் சார்பில், சானிடைசர் வழங்கவும், காய்ச்சல் பரிசோதனைகளை செய்து, பக்தர்களை அனுமதிக்கவும் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமஞ்சன பூஜை மற்றும் சொர்க்கவாசல் நிகழ்ச்சி யில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை.அதற்கு பின், காலை, 6:00 மணி முதல், தொடர்ச்சியாக சுவாமி தரிசனம் செய்ய, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.