பதிவு செய்த நாள்
12
ஜன
2022
11:01
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று கூடாரவள்ளி நடந்தது.
மார்கழி மாதத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள இறைவனையே மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், 27 நாட்கள் விரதம் இருந்து, ஆண்டாள் தனது நோன்பை நிறைவு செய்யக்கூடிய நிகழ்வையே கூடாரவள்ளி என, அழைக்கின்றோம். நிகழ்வையொட்டி, மார்கழி மாதம், 27ம் தேதி அனைத்து பெருமாள் கோவில்களிலும், கூடாரவள்ளி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார நிகழ்ச்சி நடைபெறும். இதில், ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை அலங்காரங்கள் செய்யப்படும். நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாளையும், ஆண்டாள் நாச்சியாரையும் வழிபடுவது வழக்கம். இந்நாளில் ஆண்டாள், ஸ்ரீரங்கம் கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டார் என, புராணங்கள் கூறுகின்றன.
பெரியநாயக்கன் பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கூடாரவள்ளி நிகழ்ச்சியில், பெருமாள், தாயார்களுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், மார்கழி மாத விரதத்தை நிறைவு செய்யும் வகையில், பெருமாளுக்கு பக்தர்கள் படையலிட்டு, வழிபட்டு, திவ்யபிரபந்த பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில், பஜனைக் கோஷ்டியினர், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.