வடமதுரை: வடமதுரை அருகே விநாயகர் கோயிலில் சுவாமி சிலைகளை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை அடுத்த கத்தாளை குரும்பபட்டி ஊர் மந்தையில் விநாயகர் கோயில் உள்ளது. இங்கிருந்த ஒரு விநாயகர், 4 நாகர், மூஞ்சுறு வாகனம் என 6 சிலைகளை அதே கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் 24 என்பவர் கடந்த ஜன.7 இரவு உடைத்து எறிந்தார். அதே நாளில் வீரபத்திர சுவாமி, ராவணேஸ்வரர் கோயிலுக்கான மின் இணைப்பு பெட்டியையும் கற்களை கொண்டு தாக்கி சிதைத்தும், கிராமத்தில் இருந்த சில குடிநீர் தெருக்குழாய்களையும் சேதப்படுத்தினார்.
இப்பிரச்னையை உள்ளூரிலேயே பேசி முடிக்கும் நோக்கில் போலீசில் புகார் செய்யாமல் ஊர் கூட்டம் நடந்தது. இதிலும் தகராறு ஏற்பட்ட பின்னர் கோயில் சிலை உடைப்பு குறித்து வடமதுரை போலீசில் ஊர் மக்கள், இளைஞர்கள், ஹிந்து முன்னணி என 3 புகார்கள் நேற்று தரப்பட்டது. விசாரணையில், கேரளாவில் நிதிநிறுவனம் நடத்தும் பாலகிருஷ்ணன் அங்கு வேறு மத பெண்ணை காதலிப்பதும். அதற்காக மதம் மாறி சலீம் என பெயர் மாற்றம் செய்திருப்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் தெருக்குழாய்களை சேதம் செய்து ஊர் பஞ்சாயத்தில் அபராதம் செலுத்தியதும் தெரிந்தது. விசாரணைக்கு பின்னர் வடமதுரை போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.