சிங்கம்புணரி: சித்திரை முதல்நாள் புத்தாண்டு கண்டு முதல்மழை பொழிந்த முத்தான நிலத்தை, பொன் ஏர் பூட்டி உழுது திருத்தி, நித்திரை மறந்து முக்கால் ஆண்டும் முழுமூச்சாய் உழைக்கும் தமிழ் விவசாய வர்க்கம் தனது ஆநிரை செல்வங்களுக்காக தை இரண்டாம் நாள் கொண்டாடும் பண்டிகையே மாட்டுப்பொங்கல்.
மார்கழி கரைய துவங்கிவிட்டால் போதும் வீட்டையும் முற்றத்தையும் வெள்ளையடித்து சுத்தப்படுத்துகிறார்களோ இல்லையோ, வீரத்தொட்டிலாக விளங்கும் மஞ்சுவிரட்டு தொழுவங்களை தயார்படுத்த தொடங்கிவிடுவார்கள் தமிழர்கள். தமிழர்களைப் பொருத்தவரை வீட்டுக்குள் மாட்டப்பட்ட தொட்டிலும் வெளியில் கட்டப்பட்ட மாட்டு தொழுவமும் ஒன்றே. பிள்ளைகளின் பெயர்களை கன்றுகளுக்கும், காளைகளின் பெயர்களை பிள்ளைகளுக்கும் சூட்டி மகிழ்வது தமிழினம். தமக்கான வீட்டு பொங்கலை எளிமையாகவும் கால்நடைகளுக்கான மாட்டுப் பொங்கலை அது விமரிசையாகவும் கொண்டாடுவது மூலம் காளைகளின் மீது தமிழர்கள் வைத்திருக்கும் பாசமும் பக்தியும் தெரியும். அந்த வகையில் இன்னும் ஓரிரு நாளில் பட்டி தொட்டி எங்கும் மாட்டு பொங்கலை கொண்டாட மஞ்சுவிரட்டு தொழுகள் தடபுடலாக தயாராகி வருகிறது. வெள்ளை அடித்து வர்ணம் பூசுவது பனை, தென்னை ஓலைகளைக் கொண்டு தற்காலிக தொழுவம் அமைப்பதுமாக அனைத்து கிராமங்களிலும் இரவு பகலாக பணிகள் நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடு, விழிப்புணர்வுகளுடன் இந்தாண்டின் மாட்டுப் பொங்கல் களைகட்டத்தான் போகிறது. லிங்கத்திமில் கொண்ட காளைகளும், வீரத்திமிர் கொண்ட காளையர்களும் பேசிக்கொள்ளும் மொழியே ஜல்லிக்கட்டு. அம்மொழி மாட்டுப்பொங்கல் தொடங்கி சில மாதங்களுக்கு தமிழக பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கத்தான் போகிறது.