பதிவு செய்த நாள்
13
ஜன
2022
01:01
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலமான, அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா இம்மாதம், 3 ம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், ஆஞ்சநேயர் சன்னதி முன்பு சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் ஆகிய மூன்று ஆழ்வார்கள், சொர்க்கவாசல் வெளியே, அரங்கநாதப் பெருமாளை, எதிர்கொண்டு அழைக்க காத்திருந்தனர். அதிகாலை, 5:45 மணிக்கு, சொர்க்க வாசல் திறந்து, ஆழ்வார்களுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்பு சொர்க்கவாசல் வீதி, தேர் நிலை வீதி வழியாக கோவிலுக்குள் சென்று அவரோகணம் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பூஜைகள் செய்து பின்பு பக்தர்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டது. நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று, சுவாமி தரிசனம் செய்து, பின்பு மூலவரை வழிபட்டு, சொர்க்க வாசல் வழியாக வெளியே சென்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன், ஸ்தலத்தார், மிராசுதாரர்கள் ஆகியோர் செய்திருந்தனர். காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.