பதிவு செய்த நாள்
13
ஜன
2022
01:01
கோவை: கோவையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு, 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தாடைகள், சீருடைகள் வழங்கப்பட்டன.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சமீரன் முன்னிலையில் நேற்று புத்தாடைகள், சீருடைகள் வழங்கப்பட்டன.கோவை மாவட்டத்தில், 254 திருக்கோவில்களில் பணியாற்றும், 407 அர்ச்சகர்களுக்கு தலா இரண்டு வேட்டிகள் வீதம், 814 வேஷ்டிகளும், 347 ஆண் பணியாளர்களுக்கு தலா இரண்டு பேன்ட்ஸ், சட்டை வீதம், 694 பேன்ட்ஸ், சட்டைகளும், 296 பெண் பணியாளர்களுக்கு தலா இரண்டு புடவைகள் வீதம், 592 புடவைகளும் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம், 1,091 பேருக்கு, 23 லட்சத்து, 2 ஆயிரத்து, 450 ரூபாய் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன் கூறுகையில், கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களை, பக்தர்கள் எளிதில் அடையாளம் காண அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் மற்றும் பூசாரிகள் ஆகியோருக்கு, மயில்கண் பார்டர் பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் பெண் பணியாளர்களுக்கு, அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவை, ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற முழுக்கால் சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணிகள் வழங்கப்படுகிறது, என்றார்.