பதிவு செய்த நாள்
14
ஜன
2022
03:01
அவிநாசி: கொரோனா கட்டுப்பாடால், வீடுகளில் பொங்கல் வைத்து, மக்கள் வழிபட்டனர். பொங்கல் பண்டிகையின் போது, ஊரெங்கும் விழா கோலம் கண்டிருக்கும். குடியிருப்புவாசிகள் இணைந்து, விளையாட்டுப் போட்டி நடத்துவது, கலை நிகழ்ச்சி, பொது இடங்களில் பொங்கல் வைப்பது என, வீதி, தெருக்கள் எங்கும், விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால், கொரோனா கட்டுப்பாடால், இத்தயை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. கோவில்களுக்கு செல்வதற்கு கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், மக்கள், தங்கள் வீடுகளில் விறகு அடுப்பு வைத்து, பொங்கல் வைத்து, இறைவனை வழிபட்டனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூட தங்கள் வீடுகளின் வாசலில் காஸ் அடுப்பு வைத்து, பொங்கல் வைத்து, குடும்பத்துடன் வழிபட்டனர். அவிநாசி, சின்னேரிபாளையம் அபிராமி கார்டன் உள்ள ஸ்ரீ.விநாயகர் கோவில் 8ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் பங்கேற்றனர். அவிநாசி, சேவூர் காவல் நிலையத்தில் போலீசார் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
கோவில்களில் சிறப்பு பூஜை: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கலை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதேபோல் கிராமப் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.