பதிவு செய்த நாள்
17
ஜன
2022
05:01
கிணத்துக்கடவு : கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் நேற்று, கல்லாபுரம், கோதவாடி மாலகோவில்கள் திறக்காததால், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.
பொங்கல் நாட்களில் கால்நடைகள் ஈனும் கன்றுகள் மால கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது. பொங்கல் விழாவின் மூன்றாவது நாளான நேற்று, காணும் பொங்கல் நாளில், ஆண்டுதோறும், நேர்ந்து விடப்பட்ட கால்நடையை, அலங்கரித்து, சலகெருதாக, கோவிலுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்தாண்டு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், சிங்கையன்புதுாரில் அமைந்துள்ள ஆலமரத்து மாலகோவில் மற்றும் கல்லாபுரம் பிரிவில் அமைந்துள்ள மாலகோவில் திறக்கப்படவில்லை.தடையை மீறி கோவிலுக்கு வந்தவர்கள், கோவில் வாசலில் நின்று, சுவாமியை வணங்கிச் சென்றனர். இதேபோல, கோதவாடி மாலகோவிலும் திறக்கப்படவில்லை. கூட்டம் இல்லாமல், கோவில் வளாகம் வெறிச்சோடியது. முன்னதாக, இவ்விரு கோவில்களிலும், காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு பாலாபிேஷகம் நடத்தப்பட்டு, கோவில் நடை சாத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் கிணத்துக்கடவு போலீசார் ஈடுபட்டனர்.