பதிவு செய்த நாள்
19
ஜன
2022
02:01
சென்னை:பிரதமர் மோடி எதிரிகளை வீழ்த்தி உடல் ஆரோக்கியத்துடன் இருக்க, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சத்ருசம்ஹார ஹோமம், மிருத்யுஞ்யாகம்சென்னையில் நடந்தது.
சத்ருசம்ஹார ஹோமம் என்பது, முருகப் பெருமான் குறித்து செய்யப்படும் ஹோம வழிபாடு. எதிரிகளை வெற்றி கொள்ள உதவும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால், நவகிரஹ தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கும். கர்ம வினைகளை தீர்த்துக் கொள்ள வழி பிறக்கும்.கண் திருஷ்டி, பயம், மன சோர்வு, நோய் தொல்லைகள் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்; உறவுகள் மேம்படும்.
ஆயுள் விருத்திக்கு மிருத்யுஞ் யாகம் நடத்தப்படுகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடிக்காக, இந்த ஹோமம் சென்னை தி.நகரில் உள்ள வி.எச்.பி., அலுவலகத்தில் நடந்தது. காலை, 7:00 முதல் 11:00 மணிவரை நான்கு வேத விற்பன்னர்கள் ஹோமம் நடத்தினர்.இந்த ஹோமம் குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழக நிறுவனர் எஸ்.வேதாந்தம் கூறியதாவது:
நம் நாட்டிற்கு மிக அருமையான பிரதமராக நரேந்திர மோடி கிடைத்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவிற்கு மதிப்பு, மரியாதை கிடைத்துள்ளது. நாடு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பெரும் முன்னேற்றத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துஉள்ளார்.இந்த வளர்ச்சியை விரும்பாத தேச விரோத சக்திகள், அரசியல் லாபத்திற்காகவும், ஆட்சியை பிடிக்கும் நோக்குடனும், பிரதமரின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை அரங்கேறி வருகின்றன. எனவே, பிரதமர் நீண்ட ஆயுளுடன், இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து கொண்டு செல்ல அவருக்கு மன தைரியம் கொடுக்கும் வகையில், தைப்பூச தினத்தில் சூரசம்ஹார ஹோமமும், மிருத்யுஞ்ஜய யாகமும் நடத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.