பதிவு செய்த நாள்
19
ஜன
2022
02:01
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், தைப்பூசத் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குன்னத்தூரில் பிரசித்திபெற்ற பழனி ஆண்டவர் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8:30 மணிக்கு அலங்கார பூஜை மற்றும் காவடி பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில் வள்ளி தெய்வானை சமேதரராக சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குமாரபாளையத்தில், 300 ஆண்டுகள் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் எப்போதும் வற்றாத சுனை உள்ளது. இங்கு நேற்று காலை 9:00 மணிக்கு பால் குடங்களுடன் கோவில் வளாகத்தில் சுற்றி வரும் வைபவம் நடந்தது. காலை 10:00 மணிக்கு அபிஷேக பூஜையும், மதியம் 12:00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
எல்லப்பாளையம், பழனி ஆண்டவர் கோவிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சாலையூரில் உள்ள வாரணாபுரம் பழனி ஆண்டவர் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களை அனுமதிக்காமல் முருகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. கோவில் வளாகத்திலேயே சுவாமி புறப்பாடு நடந்தது.