பதிவு செய்த நாள்
19
ஜன
2022
02:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தென்பெண்ணை ஆற்று புனித நீரில் தீர்த்தவாரி நடந்தது.
கொரோனா ஊரடங்கால், கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடக்க வேண்டிய தீர்த்தவாரி, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில், தென்பெண்ணை ஆற்று புனித நீர் கொண்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆண்டுக்கு மூன்று முறை, வெளியில் சென்று தீர்த்தவாரி நிகழ்வு நடக்கும். இதில், ரத சப்தமி நாளில், கலசப்பாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று, பள்ளிக்கொண்டாப்பட்டு துரிஞ்சலாற்றிலும், தை மாதம், 5ம் தேதி மணலுார் பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், அருணாசலேஸ்வரர் பங்கேற்கும் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி, நேற்று தை மாதம், 5ல் நடக்க வேண்டிய, தென்பெண்ணை ஆறு தீர்த்தவாரிக்கு, கொரோனா ஊரடங்கால் அருணாசலேஸ்வரர் செல்லவில்லை, இதற்கு மாற்றாக தென்பெண்ணை ஆற்று புனித நீரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சூல வடிவிலான அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது ஈசான்ய குளக்கரையில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில், தரிசனத்திற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர்.