கொண்டல் குமார சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2022 02:01
மயிலாடுதுறை : கொண்டல் குமார சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முருக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா கொண்டல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கீழ் பழனி என்று அழைக்கப்படும் குமார சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் எழுந்தருளியுள்ள குமார சுப்ரமணிய சுவாமிக்கு உகந்த பூச நட்சத்திரத் துடன் கூடிய தைப்பூசத்தன்று அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய தைப்பூச நன்னாளில் கொண்டல் மட்டுமன்றி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கோயிலுக்கு பக்தர்கள் வந்து அலகு காவடி, பால் காவடி எடுத்து வந்தும், மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தி முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். இவ்வாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறை படி கொண்டல் குமார சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா நடத்தப்பட்டது. அதனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு குமார சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மீண்டும் கோவிலை அடைந்தார். அப்போது ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து ஆரத்தி எடுத்து முருகப்பெருமானை வழிபட்டனர். கோவிலில் உற்சவர் சிலைகள் திருட்டு போனதால் பழைய உற்சவர் சிலையில் படமே வீதி உலாவாக எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி லாமேக்கு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.