பதிவு செய்த நாள்
11
ஜூலை
2012
10:07
ஆழ்வார்குறிச்சி: சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று மழை வேண்டி வருணஜெபம் நடந்தது. அம்பாசமுத்திரம் தாலுகாவில் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. சுமார் 85 அடி கொள்ளவு கொண்ட அணையில் இருந்து அரத்தப்பத்து கால்வாய், வடதுருவப்பத்து கால்வாய், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர் பெருங்கால்வாய், மஞ்சள்புளி கால்வாய், காக்கநல்லூர் கால்வாய், காங்கேயன் கால்வாயக்கு தண்ணீர் செல்கிறது. அணையில் தண்ணீர் பெருமளவு குறைந்ததை தொடர்ந்து கடனா அணையின் அனைத்து நீர்களை பயன்படுத்துவோர் சங்கத்தினர் மழை வேண்டி சிவசைலம் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் கோயிலில் வருணஜெபம் நடத்தினர். கல்லிடைகுறிச்சி ராமன் வாத்தியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் நாரம்புபட்டர், கோவில் வாத்தியார் சங்கர்நாராயணன், பிரம்மதேசம் சங்கர் அய்யர், விஸ்வநாதன், மணிகண்டன், அப்புநாதபட்டர் ஆகிய வைதீகர்கள் கும்பஜெபம், வேதபாராயணம் ஆகிய வைபோகங்களை நடத்தினர். பின்னர் விநாயகர், முருகர், நந்திபகவான், சிவசைலநாதர் பரமகல்யாணி அம்பாள் உட்பட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் விசேஷ அபிஷேகம் நடத்தினர். கோவிலில் சுவாமி அம்பாளுக்கு நாரம்புநாதபட்டர் சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜைகள் நடத்தினார். பின்னர் கருணையாற்றில் சிறப்பு நதிபூஜையும், அன்னதானமும் நடந்தது. வருணஜெபத்தில் குடியிருப்பு உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன், மாரியப்பன்(அம்பபை), உதவி பொறியாளர்கள் நந்தினி, சக்திவேல்சுவாமிதாஸ், பேட்டர்சன் குழைந்தைராஜ், ஆவுடைநாயகம், இளநிலை பொறியாளர் அப்துல்ரகுமான் (ராமநதி அணை) உட்பட கடணாஅணை அனைத்து நீர்பாசன சங்கத்தினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.