பதிவு செய்த நாள்
11
ஜூலை
2012
10:07
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஐந்து நிலை ராஜகோபுரம் பணிகள் நிறைவுற்று, வர்ணம் தீட்டும் பணி துவங்கவுள்ளது. கந்தசஷ்டி கசவம் அரங்கேறிய தலமான சென்னிமலை மலைக்கோவிலுக்கு, தினமும், ஏராளமான முருகபக்தர்கள் குவிகின்றனர். குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர். இக்கோவிலில், ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் பல்வேறு திருப்பணிகள், 2005ல் துவங்கி நடந்து வருகின்றன. ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோபுரம் முழுவதும், 146 ஸ்வாமி சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. பஞ்சவர்ணம் பூசும் பணி விரைவில் துவங்கவுள்ளது. அதேபோல், பல்வேறு திருப்பணிகள் இரவு பகலாக நடக்கிறது. 45க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். மலை மீதுள்ள கோவில் வளாகத்தில், ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக மார்க்கண்டேஸ்வரர் சன்னதி, காசிவிஸ்வநாதர் சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. ராசிபுரத்தில் இருந்து கருங்கற்கள் கொண்டு வரப்பட்டு, முழுவதும் கற் கோவிலாக வடிவமைத்துள்ளனர். சிற்ப வேலைப்பாடுகளும், தூண்களும், சோழர்கால முறையில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளன. மூலவர் விமானம் புதுப்பிக்கும் பணி, ஆறு லட்சம் ரூபாய் செலவில் நிறைவுற்றுள்ளது. மதில் சுவர் மட்டும், 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதை மேலும் அழகுபடுத்த, மதில் சுவரின் மேற்பகுதியில் கருங்கல்லிலேயே பிரஸ்தரம் வடிவமைக்கப்படுகிறது. சுவரில் பல இடங்களில் வேலும், மயிலும் சிலையாக வடிக்கப்பட்டுள்ளன. திருப்பணி, ஓராண்டுக்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.