செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்தது. சாமி தரிசனம் செய்ய காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 8 மணிக்கு மகா தீபாரதனை செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. வழக்கம் போல் மூலவர் சாமி தரிசனம் நடந்தது. தை அமாவாசை என்பதால வழக்கத்தை விட பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குவிந்த பக்தர்களால் மேல்மலையனூரில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.