திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைஅமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தை அமாவாசை நேற்று முன்தினம் பகலில் துவங்கி நேற்று பகல் வரை இருந்தது. இதனால் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைஅமாவாசை தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கோயில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனிதநீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோயிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடந்தன.