திருஞான சம்பந்தர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தபோது, மக்கள் பலர் சிவனடியார்களாக மாறினர். இதை அறிந்த சமணர்கள், பாண்டிய மன்னரான கூன்பாண்டியனிடம் புகார் செய்தனர். சிறுவன் சம்பந்தனைக் கண்டதால் தங்களுக்கு ‘கண்டு முட்டு’ ஏற்பட்டதாக தெரிவித்தனர். கண்ணால் கண்டதால் ஏற்படும் தீமைக்கு ‘கண்டு முட்டு’ என்று பெயர். இத்தகவலைக் கேட்ட பாண்டியனோ தனக்கு ‘கேட்டு முட்டு’ ஏற்பட்டதாக வருந்தினான். தீமையைக் காதால் கேட்பதற்கு ‘கேட்டு முட்டு’ என்று பெயர். சம்பந்தரின் அருளால் கூன் நீங்கப் பெற்ற பாண்டியன் சிவபக்தராகி ‘நின்றசீர் நெடுமாறன்’ என பெயர் பெற்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக உயர்ந்தார்.