பதிவு செய்த நாள்
05
பிப்
2022
11:02
விருத்தாசலம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 3ம் கால யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது.
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நாளை (6ம் தேதி) காலை 7:30க்கு மேல், 9:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் இரவு, தருமபுரம் 27வது ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது.நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு மேல், மூன்றாம் கால பூஜைகள் துவங்கியது.
இதற்காக, சிவாச்சாரியார்கள் வாசவி மடத்தில் இருந்து விசேஷ சந்தி முடித்து, ஊர்வலமாக யாக சாலைக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பிரம்மாண்ட யாகசாலையில் மூன்றாம் கால பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.அமைச்சர் கணேசன், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., செயல் அலுவலர் முத்துராஜா, கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அகர் சந்த், நக்கீரன் ஆசிரியர் கோபால் உட்பட முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இன்று காலை நான்காம் கால பூஜை, மாலை ஐந்தாம் கால பூஜைகள் நடக்கிறது. நாளை (6ம் தேதி) காலை ஆறாம் கால பூஜையுடன், காலை 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.