பதிவு செய்த நாள்
05
பிப்
2022
05:02
பல்லடம்: கோவில் அர்ச்சகர் பணியிடங்களை அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில், குறைந்த வருவாய் கொண்ட கோவில்களில் பல ஆண்டுகளாக பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் பணியிடங்கள் அங்கீகாரம் இன்றி உள்ளன.
இது குறித்து கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு விடுத்துள்ள கோரிக்கை மனு: கோவில்களில் தினசரி பூஜை சேய்து வரும் அர்ச்சகர்களின் பணி மிகவும் அவசியமானது. தற்போது, அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலில் சேராத வருமானம் இல்லாத, மற்றும் ஒரு கிலோ பூஜை நடக்கும் கோவில்களில் உள்ள அர்ச்சகர், பூசாரிகள் பணியிடங்களுக்கு முறையான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இதனால், அவர்களின் பணியிடங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும், இதனால் துறை ரீதியான ஓய்வூதியம் பெற முடியாமலும், பணியில் இருக்கும் போது இறந்தால், குடும்ப நல நிதியும் பெற வழி இல்லாமல் அர்ச்சகர்களும், அவர்களது குடும்பமும் தவித்து வருகின்றன. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அர்ச்சகர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்து அங்கீகரிப்பதுடன், ஓய்வூதியம், குடும்ப நல நிதி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.