பதிவு செய்த நாள்
11
பிப்
2022
02:02
நிம்மதியாக வாழ விரும்புகிறீர்களா...கர்நாடக மாநிலத்திலுள்ள தர்மசாலாவில் குடிகொண்டிருக்கும் மஞ்சுநாத சுவாமியை தரிசியுங்கள். நேத்திராவதி நதிக்கரையில் உள்ள இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் பிரச்னைகளை மஞ்சுநாத சுவாமியின் பொறுப்பில் விட்டு விட்டு நிம்மதியுடன் ஊர் திரும்புகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடுமபுரம் கிராமத்தின் தலைவராக இருந்தவர் பரமண்ண ெஹக்டே. ஒருநாள் அவரிடம் தெய்வீக தோற்றம் கொண்ட சிலர் குடிக்கத் தண்ணீர் தரும்படி கேட்டனர். ெஹக்டே கொடுத்த போது, ‘‘நாங்கள் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க விரும்புகிறோம்’’ என்றனர். அதற்கும் ெஹக்டே சம்மதித்தார். அப்போது அவர்கள், ‘‘நாங்கள் மகேஸ்வரனின் கட்டளைப்படி செயல்படும் தர்ம தேவதைகள். அற்புதங்களை எங்களால் நிகழ்த்த முடியும். இந்த இடத்தை புண்ணியத் தலமாக மாற்றப் போகிறோம். இங்கு கோயில் எழுப்பி கன்னியாகுமரி பகவதியம்மனை பிரதிஷ்டை செய்யுங்கள். மங்களூரு அருகிலுள்ள கத்ரியில் இருக்கும் குளத்தில் மஞ்சுநாதேஸ்வரர் என்னும் சிவலிங்கம் உள்ளது. அதை பகவதியம்மன் சன்னதிக்கு அருகில் பிரதிஷ்டை செய்யுங்கள். இவர்களைத் தரிசிக்க வரும் பக்தர்களின் விருப்பம் நிறைவேறும். எங்களின் பிரதிநிதியாக இருந்து பக்தர்களிடம் காணிக்கை பெற்று தர்ம காரியங்களில் ஈடுபடுங்கள்’’ என்று சொல்லி மறைந்தனர். அந்த தலமே ‘தர்மஸ்தலா’ எனப் பெயர் பெற்றது.
இந்தக் கோயிலில் தரிசனம், அர்ச்சனை, உணவு உள்பட எதற்கும் பணம் வசூலிப்பதில்லை. தர்ம தேவதையின் பிரதிநிதியாக அன்னப்ப சுவாமி சன்னதி இங்குள்ளது. மற்றவர்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள், கடன் கொடுத்து ஏமாந்தவர்கள், பாகப்பிரிவினையில் அநீதி இழைக்கப்பட்டவர்கள், நிலத்தகராறு உள்ளவர்கள், தகுந்த சாட்சிகள் இல்லாமல் தவிப்பவர்கள் மஞ்சுநாத சுவாமியிடம் ‘மஞ்சுநாத சுவாமி தானிகே’ (என் வழக்கை நியாயமாக முடிக்க வேண்டியது மஞ்சுநாத சுவாமியின் பொறுப்பு) என்று சொல்லி வழிபடுகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கோயில் அருகிலுள்ள நேத்ராவதி ஆற்றில் குளித்து ஒரு வாரம் தங்கி பலன் பெறுகின்றனர்.
கோயிலின் அமைப்பு மடத்தைப் போல உள்ளது. ராம மணிவல்லித் தாயார், சுப்பிரமணிய சுவாமி, தர்மதேவதைகள் குமாரசுவாமி, காலராகு சன்னதிகள் உள்ளன. மஞ்சுநாதரின் கருவறைக்குப் பின்புறத்தில் லிங்கோத்பவர், கணபதி காட்சி தருகின்றனர். இங்குள்ள அன்னபூர்ணா சத்திரத்தில் தினமும் 10 ஆயிரம் பேர் அன்னதானம் மூலம் பயனடைகின்றனர்.
துலாபாரமாக அரிசி, வெல்லம், பழங்கள், தானியங்களை அளிக்கின்றனர். வெள்ளித்தேர், சரவிளக்கு தீபமேற்றுதல், அன்னப்ப சுவாமிக்கு குங்கும அபிேஷகம் செய்தல் நேர்த்திக்கடன்களாக உள்ளன. இங்கு தரப்படும் தேங்காய் பிரசாதத்தை வீட்டில் வைத்தால் திருஷ்டி கோளாறு நீங்கும்.
எப்படி செல்வது:
* மங்களூரிலிருந்து 75 கி.மீ.,
* உடுப்பியிலிருந்து 100 கி.மீ.