மயிலாடுதுறை: சீர்காழியில் அமைந்துள்ள ஆதி இராகு ஸ்தலமான ஸ்ரீ பொன்னாகவள்ளி உடனாகிய நாகேஸ்வரமுடையார் கோயில் திருப்பணி துவக்கத்தை முன்னிட்டு பாலாலய விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஸ்ரீ பொன்னாகவள்ளி உடனாகிய ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயில் அமைந்துள்ளது.ஆதி இராகு ஸ்தலமாகவும் இராகு பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் விளங்கி வருகிறது. நாகனேஸ்வரம் என திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான இக்கோயில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளது. திருப்பணிகள் துவங்குவதை முன்னிட்டு நேற்று இரவு முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. காலை பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பின்னர் பாலாலய பிரதிஷ்டை நடைபெற்றது.அதனை தொடர்ந்து திருப்பணிகள் துவங்கப்பட்டு பக்தர்களுக்கு திருவருள் பிரசாதம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.