பதிவு செய்த நாள்
17
பிப்
2022
04:02
பா.கமலக்கண்ணன்
மனிதப்பிறவி ஏழு வகைப்படும். ஒவ்வொரு வகையினரும் வெவ்வேறு குணங்கள் கொண்டவர்கள் என அகத்தியர் பரிபூரணம் 1200 என்னும் நுாலில் கூறியுள்ளார்.
1. தேவர்களாக இருந்து மனிதராகப் பிறந்தவர்
2. மனிதராகப் பிறந்து, இறந்து, மீண்டும் மனிதராக பிறந்தவர்
3. மிருகங்களாக இருந்து மனிதராக பிறந்தவர்
4. பறவைகளாக இருந்து மனிதராக பிறந்தவர்
5. நீர்வாழ்வனவாக இருந்த மனிதராக பிறந்தவர்
6. ஊர்வனவாக இருந்து மனிதராகப் பிறந்தவர்
7. தாவரமாக இருந்து மனிதராகப் பிறந்தவர்
தேவர்கள் மனிதராக பிறந்தால் வேதம் ஓதுவர், தவம் செய்வர், சிவன், சக்தியை பூஜிப்பர். தானம் செய்வர். கோயில், குளம் அமைப்பர். சதாகாலமும் கடவுளைப் போற்றுவர் என 496 வது பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
கேளப்பா தேவாதி தேவர் தானும்
ஏகணிதமுடன் மானிடராய்ப் பிறந்தாரானால்
கேளப்பா கனலக் ஞானம் யோக நிஷ்டை
கிருபையுடன் சிவலிங்கம் சக்திபூசை
கேளப்பா அன்னமொடு சொர்ணதானம்
ஏகணிதமுள்ள தடாகமடா பதிகள் செய்வார்
கேளப்பா சதாகாலம் குருவைப் போற்றி
கிருபையுடன் தானிருப்பர் தேவர் தானே
பண்புள்ள மனிதன் இறந்து மீண்டும் பிறந்தால், கடவுளின் அருளை தியானித்து பொறுமையோடு தவம் செய்வான். நான் என்னும் அகங்காரம் நீங்கி ஞானிகளையும், பெரியோர்களையும் பணிந்து வாழ்வான். அறுசுவை உணவை அன்பர்களுக்கு அளிப்பான். இவையனைத்தும் உத்தமகுல மனிதனின் உண்மை இயல்பாகும் என 497 வது பாடலில் விளக்குகிறார்.
தானென்ற தேவாதி குணத்தைச் சொன்னேன்
தன்மையுள்ள மானிடர்கள் குணத்தைக் கேளு
கோனென்ற குருவருளைத் தியானம் பண்ணிக்
குவலயத்தில் பொறுமையுடன் தவமே செய்வான்
நானென்ற அகமதனை விட்டு நீங்கி
நல்லோரைப் பெரியோரை நயந்து கொள்வான்
ஊணென்ற அறுசுவையை அன்பர்க்கீவான்
உத்தமகுல மானிடரின் உண்மை காணே
மிருகமாக இருந்து மனிதராகப் பிறந்தவர் முரட்டுத்தனமாக நடந்து கடும் வார்த்தைகளைப் பேசியும், தர்மம் செய்யாமலும், முன்பின் யோசனை இல்லாமலும், பேய் போல் திரிந்து அலைவர். என 498ம் பாடலில் கூறியுள்ளார்.
காணவே மிருகாதி மனித ராகக்
காசினியில் பிறந்தவர்தம் குணத்தைக் கேளு
ஊணவே சண்டையிட்டு முரண்டு செய்து
உழன்றுமிகத் தனையறியா வார்த்தை சொல்லி
பேணவே தானமின்றி தரும மின்றி
பேய்போலே திரிந்தலைவான் பின்முன் காணான்
பூணவே விலங்கினங்கள் மனித நானால்
புண்ணியனே இக்குணத்தால் கண்டு கொள்ளே
பறவைகளாக இருந்து மனிதராக பிறந்தவர் சோறு என்று கேட்டவர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். வீண் பேச்சு பேசி அலையும் மடையர்கள். நல்ல அறிவுரை கூறினால் ஏற்க மாட்டார்கள். ஞான நாட்டம் இல்லாதவர்கள். வெட்கம், மானம், இல்லாதவர்கள், நல்லவர்களல்லர். சாகும் வரை பறந்து கொண்டேயிருப்பர் என 499ம் பாடலில் கூறுகிறார்.
கொள்ளடா விலங்கினத்தின் குணத்தைச் சொன்னேன்
குறிப்புடனே பட்சிகளின் குணத்தைக் கேளு
விள்ளடா அன்னமென்று கேட்டோர்க் கீயான்
வெறும் பேச்சாய்த் தெருந்தோறும் அலைவான் மட்டை
நல்லடா நல்வசனம் செவியிற் கேளான்
நாட்டமிலான் வெட்கமிலான் நன்மை இல்லான்
உள்ளடா உள்ளளவும் பறந்தே நிற்பான
உத்தமனே இக்குணத்தால் குலத்தைப் பாரே
நீர்வாழும் சாதியிலிருந்து மனிதராக பிறந்தவர் தெருக்கள் தோறும் கத்திக்கொண்டு, சண்டையிட்டு நிற்பர். கொலை, களவு முதலான சதிச் செயல்களில் ஈடுபடுவர். ஞானிகளைப் பற்றி இழிவாகப் பேசுவர். நல்ல உறவைப் பிரிவினை செய்வர் என 500ம் பாடலில் கூறியுள்ளார்.
பாரடா நீர்வாழும் சாதி தானும்
பக்குவமாய் மானிடராய்ப் பிறந்தா ரானால்
ஊரடா தெருத்தோறும் குலைத்து நிற்பான்
உத்தமனே சாடி சொல்லிச் சண்டை செய்வான்
கூறடா கொலை களவு சதியே செய்வான்
குருவான பெரியோரை அழிப்பாய்ச் சொல்வான்
நேரடா நல்லுறவைப் பிரிவே செய்வான்
ஊர்வன மனிதராகப் பிறந்திருந்தால் பக்தியில்லாது, புத்தி கெட்டு, பரிதவித்து, எதிலும் உறுதியில்லாது, எப்போதும் முணுமுணுத்துக் கொண்டு, நல்ல அறிவுரைகளைக் கேட்காமல் நன்மை, தீமை இரண்டும் கெட்டு உழல்வர் என 501ம் பாடலில் கூறுகிறார்.
காணவே ஊர்வனதான் மனிதராகக்
காசினியில் பிறந்திருந்தால் குணத்தைக் கேளு
ஊணவே பத்தியுடன் புத்தி கெட்டு
உழன்றுபரி தவித்து மிக உறுதிகெட்டு
நாணவே உடம்பெடுத்து முணுமு ணுத்து
நல்வசனம் நாட்டமுள்ள வசனம் கெட்டு
தோணவே நன்மை தின்மை இரண்டும் கெட்டு
தோன்றிடுமே இக்குணத்தால் குலத்தைக் காணே
தாவரத்திலிருந்து மனிதராகப் பிறந்தவர் இனிய சொற்களைக் கூறினால் கேட்க மாட்டார்கள். இன்பம், துன்பத்தை அறிய மாட்டார்கள். ஞானத்தவம் செய்ய மாட்டார்கள். உலகில் வேடமிட்டுத் திரிந்து பொய்யே பேசுவர். காட்டில் குடியிருக்கும் அரக்கர்களைப் போன்றிருப்பர் என 502ம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
குணமான ஊர்வனவின் குலத்தைச் சொன்னேன்
குறியில்லா தாவரத்தின் குணத்தைக் கேளு
இனமான இன்பங்கள் செவியிற் கேளான்
இன்பதுன்பம் இரண்டையுமே அறிய மாட்டான்
கனமான சிவதபங்கள் செய்ய மாட்டான்
காசினியில் வேடமிட்டு பொய்யே சொல்வான்
வளமான கானகமே குடியாய் நின்று
வாழும் அரக்கர் குலத்தோர் வாழ்க்கை தானே