நாளை சிவராத்திரி: சிவாலயங்களுக்கு பக்தர்கள் பாத யாத்திரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2022 11:02
பல்லடம்: நாளை நடைபெற உள்ள சிவராத்திரி விழாவில் பங்கேற்க, பக்தர்கள் பலர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
சிவனுக்கு உகந்த சிவராத்திரி விழா ஆண்டுக்கு ஒரு முறை மாசி மாதம் கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு சிவராத்திரி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்களிலும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில் விழாக்கள் கொண்டாட தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, தடை உத்தரவுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், சிவராத்திரி விழாவில் பங்கேற்ற பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை ஈஷா யோகா மையத்தில், சிவராத்திரி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாளை நடக்கவுள்ள விழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் பல்லடம் வழியாக ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஈஷா ரதம் வந்தது. பக்தர்கள் பலர் சிவனை தரிசித்தபடி பாத யாத்திரையைத் தொடர்ந்தனர்.