பதிவு செய்த நாள்
03
மார்
2022
04:03
பல்லடம்: பல்லடம் அங்காளம்மன் கோவிலில், ஓம்சக்தி பராசக்தி எனும் கோஷம் முழங்க, பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
பல்லடம், கோவை- திருச்சி ரோட்டில், பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவில் உள்ளது. பல்வேறு கிராம மக்களுக்கு குல தெய்வமாக விளங்கும் இக்கோவில், கேட்டை நட்சத்திர ஸ்தலமாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். நடப்பு ஆண்டு, 47வது குண்டம் விழா, பிப்., 28 அன்று ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மாவிளக்கு எடுத்தல், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடந்தன. நேற்று முன்தினம், அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு, நேற்று காலை 7 மணிக்கு, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். சிறுவர், சிறுமியர், பெண்கள், தாய்மார்கள், வயதானவர்கள், மற்றும் திருநங்கையர் உள்ளிட்ட அனைவரும் பக்தியுடன் குண்டம் இறங்கியபோது, கூடியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி எனும் கோஷம் எழுப்பி பக்தி பரவசம் ஊட்டினர். முன்னதாக, வெண்ணை காப்பில் அலங்கரிக்கப்பட்ட அம்மன், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்குப் பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, மஞ்சள் நீராடல், மற்றும் அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.