மார்க்கண்டேயருக்காக சிவன் மழு என்ற ஆயுதம் (கோடரி போன்றது) ஏந்தி நடனமாடிய தலம் மழுவாடி. தற்போது ‘மழபாடி’ என மாறி விட்டது. நந்திதேவர், சுயசாம்பிகையை இங்கு திருமணம் செய்து கொண்டார். தேவாரம் பாடிய சுந்தரரின் கனவில் தோன்றிய சிவன், “மழுவாடிக்கு வர மறந்தனையோ?,” என நினைவூட்டினார். உடனே இங்கு வந்து ‘பொன்னார் மேனியனே’ என்று தொடங்கும் புகழ் மிக்க பதிகத்தைப் பாடினார். “என் தாயானவனே! திருமழபாடியில் அருள்புரியும் மாணிக்கமே! உன்னை விட்டால் வேறு யாரை நான் நினைப்பேன்’’என்ற பொருளில் ‘மழபாடியில் மாணிக்கமே! அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே!” என சுந்தரர் உள்ளம் உருகிப் பாடினார்.