பதிவு செய்த நாள்
08
மார்
2022
10:03
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மாசி திருத்தேர் விழாவில் லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் அமாவசையன்று மயான கொள்ளையும், 5ம் தேதி மாலை தீமிதி விழாவும் நடந்தது. முக்கிய திருவிழாவான திருதிதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்தனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஸ்தல புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் சக்தி இழந்த சிவபெருமன் மகா சிவராத்திரி இரவு மேல்மலையனுார் மயானத்திற்கு வருகிறார். மறுநாள் மயானத்தில் நடக்கும் மயான கொள்ளையில் பார்வதிதேவியின் அம்சமான அங்காளபரமேஸ்வரி விஸ்வரூபம் எடுத்து பிரம்ம கபாலத்தை ஆட்கொள்கிறார். சிவபெருமானுக்கு பித்து தொளிகிறது.
விஸ்வரூபம் எடுக்கும் அங்காளம்மனை சாந்தப்படுத்த தேவர்கள் விழா எடுக்கின்றனர். இந்நிகழ்வே மாசி பெருவிழாவாக இங்கு நடந்து வருகிறது. நேற்று மாலை 3.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை தேரில் ஏற்றி வடம் பிடித்தல் துவங்கியது. மாட வீதிகள் வழியாக தேர்பவனி நடத்தது. லட்சக்கணக்கானவர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் பவனியின் போது தானியங்கள், பழங்கள், காய்கறிகள், நாணயங்களை வாரி இறைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் சிறுமான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், கலெக்டர் மோகன், டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ஸ்ரீநாதா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழு தலைவர் வடிவேல், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், சந்தானம், ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.