திருக்கடையூர் கோவிலில் 27ம் தேதி கும்பாபிஷேகம்: டிஐஜி ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2022 11:03
மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலுக்கு வரும் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்த இத்தலத்தில் சிறப்பு யாகம் நடத்தி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவின் கும்பாபிஷேகம் வரும் மார்ச் 27ஆம் தேதி காலை 10 மணி முதல் 11:30 மணிக்குள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் திருப்பணிகள் மற்றும் யாகசாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தஞ்சை சரக டிஐஜி கயல்விழி நேற்று மாலை திருக்கடையூர் கோவிலுக்கு வந்தார். அங்கு அவர் தருமபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் குருமகாசந்நிதானம் முன்னிலையில் டிஐஜி கயல்விழி கோவிலுக்குள் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சுவாமி, அம்பாள் மற்றும் காலசம்ஹாரமூர்த்தி சன்னதிகளில் டிஐஜி சுவாமி தரிசனம் செய்தார். ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி சுகுணா சிங் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.