பதிவு செய்த நாள்
08
மார்
2022
11:03
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே, தேரோட்டத்தின்போது, 24 அடி உயர தேர் பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார் பேட்டை தாலுகா, எலவனாசூர்கோட்டை அங்காளம்மன் கோவிலில் மாசி மாத மயான கொள்ளை திருவிழா நடந்து வருகிறது.
இத்திருவிழா 2ம் தேதி துவங்கி நடந்து வரும் நிலையில், நேற்று தேரோட்டம் நடந்தது.நேற்று காலை 10:30 மணியளவில், தேரில் அம்மன் சிலையை வைத்து அலங்கரித்து, சிறப்பு பூஜை, தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது. முக்கிய சாலைகள் வழியாக சென்ற தேர், மதியம் 1:30 மணிஅளவில் மேட்டுத் தெருவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பள்ளத்தில் தேர் சக்கரம் சிக்கி, 24 அடி உயரமுள்ள தேர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, தேரை மீட்டனர். பின், தேர் நிலையை அடைந்தது.இந்த விபத்தில், பூசாரி சுந்தரம், 55, லேசான காயங்களுடன் தப்பினார். அவரை உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.