பதிவு செய்த நாள்
10
மார்
2022
07:03
திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் உள்ள பொன்னர் சங்கர், பெரிய காண்டி அம்மன் கோவிலில், மாசித் திருவிழாவையொட்டி, பெரிய காண்டியம்மன் தேரோட்டம் நடைபெற்றது.
இந்த ஆண்டு மாசிப்பெருந்திருவிழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. நேற்று நடைபெற்ற வேடபரி உற்சவத்தின் போது, முரசு கொட்டும் காளை முன் செல்ல, மோதாளங்கள் முழங்க, கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் பொன்னரும், யானை வாகனத்தில் பெரிய காண்டி அம்மனும் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து, கருமகவுண்டம்பட்டி, ஆனையூர், சுண்டக்காபட்டி, அமயபுரம் போன்ற கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில், இளைஞர்கள் குதிரை வாகனத்தில் இருந்த சுவாமியையும், காடையாம்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில், யானை வாகனத்தில் இருந்த சுவாமியையும் இளைஞர்கள் சுமந்து சென்றனர்.
ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட பெரியகாண்டியம்மன், இளைப்பாற்றி மண்டபத்தில் எழுந்தருளினர். அதே சமயம், குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பொன்னர், அணியாப்பூர் குதிரை கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் ஆகியவற்றைச் சுற்றி இளைப்பாற்றி மண்டபம் வந்தடைந்தார். இளைப்பாற்றி மண்டபத்தில் இருந்து, சுவாமிகள் புறப்பட்டு, மீண்டும் வீரப்பூர் கோவிலுக்குச் சென்ற போது, வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய காண்டியம்மன் தேரோட்டம், இன்று பகல் 12 மணியளவில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து, சுவாமியை வழிபட்டனர்.