பதிவு செய்த நாள்
10
மார்
2022
07:03
திருச்சி: திருச்சி புத்துாரில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில், குட்டிகுடி திருவிழா நடைபெற்றது. சோழ மன்னர்களால் குலதெய்வமாக வணங்கப்பட்டு, தற்போது, திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாக, புத்துார் குழுமாயி அம்மன் விளங்குகிறது.
இந்த ஆண்டு, மாசி பெருந்திருவிழா கடந்த பிப். 27ம் தேதி, காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி கடந்த 8ம் தேதி இரவு காளியாவிட்டம் நிகழ்ச்சியும், 9ம் தேதி சுத்தபூஜை மற்றும் ஓலைப் பிடாரி அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக்குடி திருவிழா நடைபெற்றது. முதலில் மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் சிவராசு வழங்கிய ஆட்டுக்கிடாவை, மருளாளி சிவக்குமார், கழுத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சினார். தொடர்ந்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக அம்மனுக்கு செலுத்திய ஆட்டு கிடாய்களின் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சிய மருளாளி, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பக்தர்களும் நுாற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவையொட்டி, புத்துார் பகுதி முழுவதும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.