பதிவு செய்த நாள்
11
மார்
2022
10:03
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, உற்சவர் கபாலீஸ்வரர், கற்பகாம்பாளுடன் சூரிய, சந்திர பிரபை வாகனத்தில், மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதப் பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை, வெள்ளி சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் உற்சவர் கபாலீஸ்வரர், கற்பகாம்பாளுடன் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நேற்று இரவு கிளி, அன்ன, வாகனங்கள் புறப்பாடு நடந்தது.விழாவின் மூன்றாம் நாளான இன்று காலை, 6:00 மணிக்கு வெள்ளி அதிகார நந்தியில், கபாலீஸ்வரர் மாட வீதிகளை வலம் வந்து அருள் பாலிப்பார். அவருடன் கந்தர்வன், கந்தர்வி, மூஷிகன் உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருவார். திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலிலும் பங்குனி மாத பெருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் சந்திரசேகரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை, 6:00 மணிக்கு அதிகார நந்தி சேவை நடக்கிறது.கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரம்:கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அதிகாரநந்தி சேவை, தேர், அறுபத்து மூவர் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். அவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு அளிக்கவும் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.மாடவீதிகளை சுற்றி, 14 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. நான்கு வீதிகளிலும், 32 கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை, கோவில் வளாகத்தில் உள்ள நுாலகம் பகுதியில் அமைக்கப்படுகிறது.முக்கிய விழாக்களில், 100க்கும் மேற்பட்ட போலீசார், மாறுவேடங்களில் பக்தர்களோடு கலந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், நகை பறிப்பு, பிக்பாக்கெட் திருடர்களின் படங்கள், மாடவீதிகளை சுற்றி, ஒட்ட ஏற்பாடு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.