சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2022 12:03
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 1ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மயான கொள்ளை திருவிழா நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.
கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4;00 மணிக்கு அம்மன் புறப்பாடும் தேரடியில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து 4:50 மணிக்கு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், ஒன்றிய துணை சேர்மன் நெடுஞ்செழியன் கலந்து கொண்டனர். திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். எஸ்.பி., செல்வக்குமார் தலைமையில் ஏ.டி.எஸ்.பி., விஜய்கார்த்திக், சுப்புராயன் மேற்பார்வையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி உற்சவத்திற்க்கு நேற்று கொடியேறின.