பதிவு செய்த நாள்
15
மார்
2022
03:03
மேட்டுப்பாளையம்: ஜடையம்பாளையம் புதூரில், புதிதாக திருப்பணிகள் செய்த, மந்தை மாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் புதூரில், மந்தை மாரியம்மன் மற்றும் சித்தி விநாயகர் கோவில் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து, புதிதாக மூலஸ்தானம், விமான கோபுரம், பாலமுருகன், வராகி, மகேஸ்வரி, துர்க்கை மற்றும் அரச மரத்து பிள்ளையார் ஆகிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் கும்பாபிஷேகம் நேற்று காலை, நடந்தது. விநாயகர் பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் விழா துவங்கியது. மாலையில் முதல் கால யாக பூஜையும், இரவு, 8:00 மணிக்கு மந்தை மாரியம்மனுக்கு எந்திர ஸ்தாபனம், கோபுரத்தில் கலசம் அமைக்கப்பட்டது. இன்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், அம்மனுக்கு காப்பு கட்டுதலும் நடந்தது. அதை தொடர்ந்து,9:30 மணிக்கு தீர்த்த குடங்களை யாகசாலை மற்றும் கோவிலை சுற்றி எடுத்து வந்து, கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கோவிலை சுற்றி இருந்த பக்தர்கள் மீது, புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, ஊர் கவுடர் பார்த்திபன், செந்தில் குரூப் கம்பெனி சேர்மன் ஆறுமுகசாமி, கோவை மாவட்ட ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளை தலைவர் வெள்ளியங்கிரி, எம்.எல்.ஏ., செல்வராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஊர்கவுடர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.