பாதுகாப்பற்ற கோவிலில் இருந்த சிலையை வைத்திருந்தது குற்றமா? நெம்மேலி கிராம மக்கள் கொதிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2022 11:03
மயிலாடுதுறை: சீர்காழி அருகே சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள கோவில்களுக்கு ஆதரவாக களமிறங்கிய உள்ள நெம்மேலி கிராம மக்கள் பாதுகாப்பற்ற கோவிலில் இருந்த சிலையை வைத்திருந்தது குற்றமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மன்னங்கோயில் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் சுவாமி, நல்ல காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கஞ்சமலை ஈஸ்வரர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலை குன்னம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்டேட் உரிமையாளர் சிவசுப்பிரமணிய ஐயர் என்பவர் ஒரு ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உடன் தனக்கு சொந்தமான இடத்தில் கோவிலை அமைத்து வழிபாடு செய்துள்ளார். இந்த கோவிலில் உலோகத்தாலான நல்ல காத்தாயி அம்மன், கஞ்சமலை ஈஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, ஆஞ்சநேயர் சுவாமி உற்சவர் சிலைகள் இருந்துள்ளன. கடந்த 1975 ஆம் ஆண்டு இக்கோவிலின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை ஏற்றுள்ளது. அதன் பின்னர் உற்சவர் சிலைகள் கோவிலில் இல்லை என கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் நீண்ட நாட்களாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த நிலையில் சீர்காழியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர் 2000 மற்றும் 2014 ஆம் ஆண்டு என இரு முறை கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார்.
அப்போதும் உற்சவர் சிலைகள் கோவிலுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் நல்ல காத்தாயி அம்மன் கோவில் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் ஆக்கிரமித்தது தொடர்பான பிரச்சனையில் தற்போது ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், குலதெய்வ வழிபாட்டாளருமான வீரமணி உள்ளிட்ட பலர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வேளையில் வீரமணி வெளியூர் பணியில் இருந்ததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீரமணி உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த சிலர் மீது நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கிலும் பிரச்சினைக்குரிய நீலநிலம் கோவிலுக்கு சொந்தமானது என தீர்ப்பாகி உள்ளது. இதனை அடுத்து வீரமணி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் உலோகச் சிலைகள் மீட்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனை அடுத்து உலோகச் சிலைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது 5 சிலைகள் திருமயிலாடி கோவிலில் உள்ள பாதுகாப்பு மையத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த சிலைகள் 2021 ஆம் ஆண்டு கோவிலுக்கு கொண்டு வந்து பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு திரும்ப கொண்டு சென்றபோது அதில் இரண்டு சிலைகள் நல்ல காத்தாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து வீரமணி இந்து சமய அறநிலையத்துறை பொறுப்பு ஏற்றதில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக காணாமல் போன நல்ல காத்தாயி அம்மன், கஞ்சமலை ஈஸ்வரர், விநாயகர், ஆஞ்சநேயர் ஆகிய நான்கு உலோகச் சிலைகளை கண்டுபிடித்து தரக்கோரி முதல்வரின் தனிப்பிரிவு, இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த்துறை, சிலை திருட்டு தடுப்பு போலீசாருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். இதில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் மட்டும் மன்னங்கோவிலுக்கு வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து வீரமணி மன்னங்கோயில் நல்ல காத்தாயி அம்மன் கோவில் குருக்கள் சூரியமூர்த்தியை விசாரித்தால் சிலைகளை பற்றிய உண்மை நிலை தெரியவரும் என சிலை திருட்டு தடுப்பு போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து அவசரகதியில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சிலை திருட்டு தடுப்புப் போலீசார், ஏடிஎஸ்பி. ராஜாராம் தலைமையில் நெம்மேலி கிராமத்திற்கு வந்து குருக்கள் சூரியமூர்த்தி வீட்டில் இருந்த வெள்ளி கவசங்கள், வெள்ளி பொருட்கள் மற்றும் சூரியமூர்த்தி பூஜை செய்யும் மற்றொரு கோவிலான நெம்மேலி விசுவநாதர் கோவிலில் இருந்த சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், சூரியமூர்த்தி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுவாமி சிலைகள் நெம்மேலி கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோவிலுக்கு சொந்தமானது, கோவில் சிதிலமடைந்து பாதுகாப்பு இல்லாததால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முயன்றபோது அந்த சிலை எங்கள் பட்டியலில் இல்லை எனக் கூறி ஏற்க மறுத்துவிட்டனர். அதனால் பொதுமக்கள் வேறு வழி இன்றி அந்த சிலையை கொண்டு வந்து நெம்மேலி கோவிலில் வைத்ததாகவும், வெள்ளிக் கவசங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் வழங்கிய உபயதாரர்கள் பூஜை நேரத்தைத் தவிர பிற நாட்களில் பாதுகாப்பாக வீட்டில் வைக்க சொன்னதாலேயே அங்கு வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்த நெம்மேலி கிராமவாசிகள் குறைந்த வருவாயில் காலம் தவறாமல் கோவில் பூஜைகளை நடத்தி வந்த குருக்களை, உண்மையை தீர விசாரிக்காமல் கைது செய்து சிறையில் அடைத்து இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து நெம்மேலி கிராமவாசிகள் சூரிய மூர்த்தியை குற்றமற்றவர் என நிரூபித்து வெளியே கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து நெம்மேலி கோவிலில் கூடி ஆலோசித்தனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கோவில் சிலைகள் மாயமானது குறித்த புகாரை திரும்பிக்கூட பார்க்காத இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குருக்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தங்களுக்கு எந்த நெருக்கடியும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கோவிலை ஆய்வு செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்தனர். மேலும் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் அப்பாவி குருக்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கப்படமாட்டார் என்று குற்றம்சாட்டியதுடன், பாதுகாப்பற்ற கோவிலிலிருந்த சிலையை வைத்திருந்தது குற்றமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வீரமணி புகார்தாரர்- மன்னங்கோயில் நல்ல காத்தாயி அம்மன் கோவில் நிலம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு காவல்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனியார் வசமிருந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து மாயமான சிலைகளை கண்டுபிடித்து தரவேண்டும் என புகார் அளித்ததுடன், கோவில் பிரதான அர்ச்சகர் சூரியமூர்த்தி விசாரணை செய்தால் சிலைகள் பற்றிய தகவல் வெளிவரும் என தெரிவித்திருந்தேன். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சூரியமூர்த்தி வீட்டில் ஆய்வு செய்தபோது அவரது வீட்டில் அம்மன் வெள்ளி கவசம், வெள்ளி பொருட்கள் உலோக சிலை கைப்பற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி எங்கள் கோவிலில் இருந்து மாயமான சிலைகளையும் மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுவதுடன், மாயமான சிலைகளை மீட்க போராடி வரும் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்பழகன்- மன்னங்கோயில்: எங்கள் கிராமத்தில் அமைந்துள்ள நல்ல காத்தாயி அம்மன் கோவிலில் இருந்த கஞ்சமலை ஈஸ்வரர் நல்ல காத்தாயி அம்மன் ஆஞ்சநேயர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகர் உள்ளிட்ட சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்புகோவில் பூசாரி ஒரு வீட்டில் இருந்தது. அவரது வீட்டில் ஏற்பட்ட ஒரு சம்பவம் காரணமாக சிலைகளை சாலையில் வீசி எறிந்தனர். அந்த சிலைகளை மீட்டெடுத்து நாங்கள் கோவில் வைத்து வழிபட்டு வந்தோம் பின்னர் அந்த சிலைகள் எப்படி காணாமல் போனது என்பது குறித்து தெரியவில்லை. தற்போது கைது செய்யப்பட்டுள்ள கோவில் அர்ச்சகரை முறையாக விசாரணை செய்து மாயமான நான்கு சிலைகளையும் மீட்டெடுத்து எங்களிடம் வழங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிவழகன்- நெம்மேலி: நெம்மேலி கோவில் சிலைகள் அறநிலையத் துறையினர் இடம் பாதுகாப்பாக உள்ளது. எந்த சிலையும் திருட்டு போகவில்லை. உத்திராபதியார் கோவில் கதவு எல்லாம் உடைந்து விட்டதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கிருந்த சிலையை இந்த கோவிலில் பொதுமக்கள் எல்லாம் சேர்ந்து எடுத்து வந்து வைத்தோம். அதைத்தான் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட வெள்ளி பொருட்கள் எல்லாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உபயம் செய்தவர்கள் நாங்கள் பூஜைக்கு வரும்போது கோவிலுக்கு எடுத்து வந்தால் போதும் எனக் கூறி குருக்களை வீட்டில் வைத்துக்கொள்ள தெரிவித்தனர். அவர்கள் கூறியதால் வீட்டில் வைத்திருந்தார் எனவே குருக்கள் சூரியமூர்த்தி குற்றவாளி இல்லை.
செல்லதுரை- நெம்மேலி: இந்த ஊரில் உத்திராபதியார் கோவில் உள்ளது. அங்கு பாதுகாப்பு இல்லை என்பதால் பொது மக்களாகிய நாங்கள் அங்கிருந்த சிலையை நெம்மேலி விஸ்வநாதர் கோவிலில் எடுத்து வந்து வைத்தோம். அதை குருக்கள் கருவறைக்குப் பின்னால் பாதுகாப்பாக வைத்திருந்தார். கோவில் கும்பாபிஷேகத்தின் போது இரண்டு பேர் வெள்ளி பொருட்களை கோவிலுக்கு வழங்கினர். அதை தான் அவர் வீட்டில் வைத்திருந்தார். இதனால் குருக்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. எனவே குருக்கள் பாதிக்கப்படாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணி: கைதுசெய்யப்பட்டுள்ள குருக்களை எனக்கு சிறு வயது முதலே தெரியும். அவர் நெம்மேலி கோவிலுக்கும், மன்னர் கோவிலுக்கும் பூஜை செய்து வருகிறார். நந்திய நல்லூரை சேர்ந்த மணி ஐயர் என்பவர் வெள்ளி பொருட்களை செய்து கொடுத்தார். அவற்றை பூஜைக்கு எடுத்து வந்து கோவிலில் பாதுகாப்பு இல்லை என்பதால் ஊரார் முன்னிலையில் மீண்டும் வீட்டில் எடுத்துக்கொண்டு வைத்துக் கொள்வார். இங்கு எடுக்கப்பட்ட சிலைக்கும் குருக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மணிமேகலை நெம்மேலி: எனது வீடு கோவிலுக்கு பின்புறம் உள்ளது. வருமானம் இல்லாததால் இந்த கோவிலுக்கு சனிக்கிழமை மட்டும் சனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை செய்துவருகிறார். குருக்கள் எந்த பொருளையும் மறைத்து வீட்டில் வைத்திருக்கவில்லை. கைது செய்யப்பட்ட குருக்களுக்கு அறநிலையத் துறையிடம் இருந்து வரும் குறைந்த அளவிலான ஊதியத்தை பெற்றுக்கொண்டு மனப்பூர்வமாக கோவிலில் பூஜை செய்து வந்தார். அவர் வயதானவர் என்பதால் அவருக்கு மன உளைச்சல் ஏற்படாமல் நடத்தப்பட வேண்டும்.
முருகன்: கைப்பற்றப்பட்ட சிலை கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் ஊர் கோவிலில் உள்ளது. குருக்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளி பொருட்கள் உபயதாரர்கள் பொதுமக்களாகிய நாங்களும் பாதுகாப்பாக வைத்திருக்க கூறியிருந்தோம். நன்கொடையாக வழங்கியவர்கள் பொருட்களின் விபரம் ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. உண்மைக்குப் புறம்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜேந்திரன்: குருக்கள் சூரியமூர்த்தி குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக கோவிலுக்கு பூஜை செய்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினர் யாரும் கோவிலிலிருந்து எந்த பொருளையும் திருடியதாக நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. எங்கள் முன்னோர்களும் கூறியது இல்லை. எங்கள் ஊரைச் சேர்ந்த யாரும் கோவில் பொருட்களை திருடி விட்டதாக எந்த புகாரும் அளிக்கவில்லை. குருக்கள் மிகவும் நேர்மையானவர் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் குருக்கள் குறித்து கிராமத்தில் யாரிடமும் விசாரிக்கவில்லை. இந்நிலையில் தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டது என குருக்கள் தற்கொலை செய்து கொண்டால் அவரின் குடும்பத்தின் நிலை என்ன ஆகும்.