பதிவு செய்த நாள்
18
மார்
2022
11:03
சத்தியமங்கலம்: மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில், பூசாரி மட்டுமே தீ மிதித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு மிக அருகில் தர்கா, கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. ஆனாலும், ஆண்டு தோறும் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில், வெகு விமரிசையாக கோவிலில் குண்டம் விழா கொண்டாடப்படுகிறது. பூசாரி மட்டுமே தீ மிதிப்பது வழக்கம்.
நடப்பாண்டு விழாவில், கடந்த, ௧௫ம் தேதி இரவு, மாரியம்மன் உற்சவர் சிலை, மேள வாத்தியங்கள் முழங்க, தொட்டகாஜனுார் சாலையில் உள்ள ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டு, அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து கோவில் முன் விறகுகளை அடுக்கி குண்டம் பற்ற வைக்கப்பட்டது. இரவில் வீரபத்ர நடனம், கரகாட்டம், பூஜா நடனம், பொம்மை நடனம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பின் அம்மன் வீதியுலா நடந்தது. தாளவாடி முழுவதும் ஒவ்வொரு வீதி தோறும் சென்று, அம்மன் அருள் பாலித்தார். அம்பேத்கர் வீதியில் மலர் பாதையில் அம்மன் சென்றது. முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நேற்று காலை நடந்தது. கோவில் முன், 30 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட குண்டத்தில் தலைமை பூசாரி சிவண்ணா தீ மிதித்தார். இதையடுத்து பக்தர்கள் குண்டத்தை தொட்டு வணங்கினர். விழாவில் தாளவாடி, தொட்டகாஜனுார், தலமலை பகுதி மக்கள் மட்டுமின்றி கர்நாடகா மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.