வடமதுரை மாசித்திருவிழா: பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2022 04:03
வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த மார்ச் 5ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர் சார்பில் மின்அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. மார்ச் 13ல் அம்மன் சாட்டுதலும், மார்ச் 15 முதல் 19 வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மங்கம்மாள்கேணி மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. காப்பு கட்டி விரதமிருந்த சிறுவர், சிறுமியர் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், கொலு, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தது. இன்று மாலை முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.