பதிவு செய்த நாள்
23
மார்
2022
06:03
சென்னை:தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒன்பது மாதங்களில், ஆக்கிரமிப்பில் இருந்த 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை ஓட்டேரியில் உள்ள விநாயகர் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர், நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். பின், அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:தமிழகத்தில் பராமரிப்பு மற்றும் குடமுழுக்கு பணிகள் நடைபெறாத கோவில்களை கண்டறிந்து, அவற்றில் பணிகள் நடக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, 100க்கும் மேற்பட்ட கோவில்களில், குடமுழுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்படும் என தெரிவித்த நிலையில், ஒன்பது மாதங்களில், 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும், 900 கோவில்களில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை, 500 கோவில்களில், பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கிராம கோவில்கள் மற்றும் ஆதிதிராவிட கோவில்களில், ஆண்டுக்கு, 1,000 கோவில்களில் மட்டுமே திருப்பணிகள் நடந்து வந்தன. ஆனால், இப்போது, அவற்றின் எண்ணிக்கை, 1,250 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பணிக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலை, அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர, உச்சநீதிமன்ற வழக்கு தீர்ப்பு குறித்து, சட்ட வல்லுனர்கள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வின் அறிக்கை கிடைத்ததும், அதை முதல்வரிடம் வழங்கி, கோவிலை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அக்கோவில் பிரச்னைகள் குறித்து விசாரிக்க, துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை கிடைத்ததும், தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.